Research Centre for Efficient Teaching Methods
Your right centre for learning and speaking English easily and effectively!
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
Quations and Answers
கேள்விகளும் பதில்களும்
சந்தேகம் - 1:
"He is writing the letter" என்றொரு வாக்கியம் இருக்கின்றது. அதேவேளை "The letter is written by him " என்றொரு வாக்கியமும் இருக்கின்றது. "is" என்பதுடன் "writing, reading" போன்ற வினைச் சொல்லின் நிகழ்கால எச்சங்கள்தான் (Present Participles) வரவேண்டும் என்றிருக்கும்போது "is" என்பதுடன் "written" எனும் இறந்தகால எச்சம் (Past Participle) வந்திருக்கின்றதே! அது, "He has written the letter" என்றுதானே வந்திருக்க வேண்டும். இது பெரிய குழப்பத்தைத் தருகின்றதே, இதன் விளக்கம் என்ன?
விளக்கம் - 1:
இதில் எவ்விதமான குழப்பங்களும் கிடையாது. மூன்று வாக்கியங்களுமே சரியானவைதான். ஆனால், இம் மூன்று வாக்கியங்களும் வெவ்வேறு விதமான பொருள்களைத் தருகின்றன.
"He is writing the letter" எனும் முதலாவது வாக்கியம்,
"அவன் அந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கின்றான்" எனவும்,
"The letter is written by him" எனும் இரண்டாவது வாக்கியம்,
"அந்தக் கடிதம் அவனால் எழுதப்படுகின்றது" எனவும்,
"He has written the letter" எனும் மூன்றாவது வாக்கியம்,
"அவன் அந்தக் கடித்தத்தை எழுதியிருக்கின்றான்" எனவும் தமிழில் பொருள் தருகின்றன.
இங்கு "He is writing the letter" எனும் வாக்கியம், "செய்வினை வாக்கியம்" என தமிழில் அழைக்கப்படுகின்றது. இதற்குக் காரணம், "அவன்" எனும் எழுவாய் அக் காரியத்தை "செய்து கொண்டிருப்பத"னாலாகும். இதனை ஆங்கிலத்தில் "Active Voice" என்று அழைப்பர்.
ஆனால், "The letter is written by him" எனும் வாக்கியம் "செயப்பாட்டு வினை வாக்கியம்" என தமிழில் அழைக்கப்படுகின்றது. இது, "கடிதம்" எனும் எழுவாய்க்கு ஒரு காரியம் செய்யப்படுவதனாலாகும். இதனை ஆங்கிலத்தில் "Passive Voice" என்று அழைப்பர்.
ஆனால், "He has written the letter" எனும் மூன்றாவது வாக்கியமோவெனில் "அவன்" எனும் எழுவாய் ஒரு காரியத்தை "செய்து இருப்பதை"க் குறிக்கின்றது. இதுவும் தமிழில் "செய்வினை வாக்கியம்" என அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் "Active Voice" என்று அழைப்பர்.
இவ்வாறு "He is writing the letter" எனவும், "He has written the letter" எனவும் இரண்டு விதமான வாக்கியங்கள் அமைவதற்குக் காரணம், "He is writing the letter" என்பது, அவன் ஒரு காரியத்தை "செய்து கொண்டு" இருப்பதையும், "He has written the letter" என்பது, அவன் ஒரு காரியத்தை "செய்து" இருப்பதையும் குறிப்பதற்காகவாகும்.
ஓர் எழுவாய், ஒரு காரியத்தை "செய்து கொண்டு" இருப்பதைக் குறிக்க, "am, is, are" என்பவற்றுடன் "writing" போன்ற நிகழ்கால எச்சங்களும், ஒரு காரியத்தை "செய்து" இருக்கும்போது அதனைக் குறிக்க "have, has, had" என்பற்றுடன் "written" போன்ற இறந்தகால எச்சங்களும் ஆங்கிலத்தில் உபயோகிக்கப்படுகின்றன.
ஆனால், ஒரு எழுவாய்க்கு ஒரு காரியம் "செய்யப்படு"மானால் அது "செயற்பாட்டு வினை" என தமிழில் அழைக்கப்படும். ஆங்கிலத்தில் அதனை "Passive Voice" என்பர். அதனைக் குறிக்க இந்த "am, is, are" போன்றவற்றுடன் "written" போன்ற இறந்தகால எச்சங்கள் உபயோகிக்கப்படுகின்றன. இதுவே, இதற்கான உண்மைக் காரணமாகும்.
சந்தேகம் - 2:
"He has written the letter" போன்ற வாக்கியங்கள், இப்போதுதான் சற்று முன்னர் நடந்து முடிந்திருக்கின்ற விடயங்களைக் குறிக்க உபயோகிக்கப்படுகின்றன எனவும், "He has been writing the letter" போன்ற வாக்கியங்கள், தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்ற காரியங்களைக் குறிக்க உபயோகிக்கப்படுகின்றன எனவும் கற்பிக்கப்படுகின்றதே, அவ்வாறாயின் "He is writing the letter" போன்ற வாக்கியங்கள் எதைக் குறிக்க உபயோகிக்கப்படுகின்றன?
விளக்கம் - 2:
உண்மையிலேயே இவ் விளக்கங்கள் யாவுமே மிகவும் பிழையானவையாகும். அவ்வாறாயின், "God has created the world million million years ago" எனும் வாக்கியத்தின் படி, அவ்வாறான விளக்கங்களின் பிரகாரம், கடவுள் இப்போதுதான் இவ்வுலகத்தைப் படைத்து விட்டு கையைக் கழுவிக் கொள்ளப் போயிருக்கிறாரா?
ஏனெனில் இவ் வாக்கியத்தின் பொருள் "கடவுள் இந்த உலகத்தை பல மில்லியன் ஆண்டுகள் முன்பு படைத்திருக்கிறார்" என்பதாகும். எனவே, எப்போதோ - பலப்பல ஆண்டுகள் முன்பு "செய்திரு"க்கும் இந்த வேலையை எப்படி "இப்போ சற்று முன்னர் செய்த" காரியம் என்று சொல்வது? இது எவ்வளவு பிழையான விளக்கம்!
எனவே, எப்போதோ - பலப்பல ஆண்டுகள் முன்பு "செய்திரு"க்கும் இந்த வேலையை எப்படி "இப்போ சற்று முன்னர் செய்த" காரியம் என்று சொல்வது? இது எவ்வளவு பிழையான விளக்கம்! உண்மையில், "சற்று முன்னர், சற்று பின்னர்" என்பதெல்லாம் பிழையான கருதுகோள்கள் ஆகும்.
இவ்வாறான "have, has, had" என்பவற்றுடன் "written, spoken" என்பன போன்ற இறந்தகால எச்சங்கள் (Past Participles) சேர்ந்து வரும் வாக்கியங்கள், ஓர் எழுவாய் "செய்திருக்கும்" காரியங்களைக் குறிப்பிடவே உபயோகிக்கப்படுகின்றன.
உதாரணமாக, "நான் அவரைக் கண்டிருக்கின்றேன், நீ ஒரு கடிதம் எழுதியிருக்கின்றாய், நாங்கள் அங்கே போய் இருந்தோம்" போன்ற "செய்திருக்கும், செய்திருந்த" காரியங்களைக் குறிப்பிடவே உபயோகிக்கப்படுகின்றன. அக் காரியத்தை "சற்று முன்னரும்" செய்திருக்கலாம்; "பல வருடங்கள் முன்பும்" செய்திருக்கலாம். அதுவல்ல, இங்கு குறிப்பிடப்படுவது. "செய்திருக்கிறாரா, செய்திருந்தாரா" என்பதுதான் இங்கு முக்கியம்!
இனி, "He has been writing the letter"எனும் வாக்கியத்தைப் பார்ப்போம். இதற்காக கொடுக்கப்படும் விளக்கமும் பிழையானதே!
இவ்வாக்கியம், "நடந்து கொண்டு இருந்து இருக்கின்ற" ஒரு விடயத்தைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு உபயோகிக்கப்படுகின்றது.
ஒருவர் ஒரு காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, வேறு காரியங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாது "அதே காரியத்தில்" ஈடுபாடு காட்டிக் கொண்டிருக்கும் போது அதனைக் குறிப்பிடவே இவ்வாறான வாக்கியங்கள் உபயோகிக்கப் படுகின்றன.
உதாரணமாக, உங்கள் நண்பர் ஒருவர் கடிதம் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கின்றார் என வைத்துக் கொள்வோம்.
அவர் வேறு எதிலுமே கவனம் கொள்ளாது கடிதம் எழுதுவதிலேயே ஈடுபட்டிருக்கின்றார் எனவும் கொள்வோம். நீங்கள் அவரை அழைத்ததையோ அல்லது அவரது தாயார் தேனீர் அருந்தச் சொன்னதையோ கவனிக்காது கடிதம் எழுதுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கின்றார்.
அடுத்த நாள் நீங்கள் அவரை சந்தித்து,"என்னப்பா, நான் நேற்று உன்னை அழைத்ததைக் கூட கவனிக்காது அப்படி என்னதான் வேலையில் மூழ்கியிருந்தாய்?" என்று கேட்கும்போது அவர் சொல்லக் கூடியது இதுவாகத்தான் இருக்கும்: "அப்படியா, நீங்கள் அழைத்தது எனக்குத் தெரியாதே, நான் அப்போது கடிதம் ஒன்று எழுதிக் கொண்டு இருந்திருக்கிறேன் (அதுதான் உங்களைக் கவனிக்கவில்லை, போலும்)"!
இவ்வாறுதான் அவர் பதில் கூறுவார். இங்கு அவர் கூறக் கூடியது, "நான் கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன்" என்பதல்ல, "நான் கடிதம் எழுதிக் கொண்டு இருந்து இருக்கிறேன்" என்பதாகும்.
இதனையே ஆங்கிலத்தில் "I have been writing a letter" என்று சொல்வோம். அவ்வாறன்றி, இந் நிலையை "I was writing a letter" என்று ஆங்கிலத்தில் சொல்வதில்லை.
சந்தேகம் - 3:
சில வாக்கியங்கள், "He has spoken" என்றும், சில வாக்கியங்களில் "He has talked" என்றும் வருகின்றது. "He has spoken" என்பதில் "spoken" எனும் Past Participle உபயோகிக்கப்பட்டிருக்க, "He has talked" எனும் வாக்கியத்தில் ஏன் "talked" எனும் Past Tense உபயோகிக்கப்பட்டிருக்கின்றது?
விளக்கம் - 3:
இரண்டு வாக்கியங்களுமே சரியானவைதான். இரண்டிலுமே உபயோகிக்கப்பட்டிருப்பவை Past Participles தான்.
"He has spoken" என்பது, "அவர் பேசி இருக்கிறார்" எனவும்,
"He has talked" என்பது, "அவர் கதைத்து இருக்கிறார்" எனவும் பொருள் தருகின்றன.
இரண்டு வாக்கியங்களும் ஒரு விடயம் "நடந்து இருக்கின்றது" என்பதையே குறிக்கின்றன.
"talked" என்பதும் ஒரு Past Participle உருவம்தான்.
எல்லா ஆங்கில வினைச் சொற்களுமே இப்படி "spoken, written, gone, given, taken" என அமைவதில்லை. ஒரு குறிப்பிட்ட தொகையான ஆங்கில வினைச் சொற்களே இவ்வாறு அமைகின்றன. இவற்றை நாம் ஒழுங்கற்ற வினைச் சொற்கள் (Irregular Verbs) என்போம்.
ஏனைய ஆங்கில வினைச் சொற்களுக்கான Past Participle கள் யாவும் "ed" என்பதை இறுதியில் சேர்ப்பதன் மூலம் பெறப்படுகின்றன. எனவேதான் இவை Past Tense கள் போன்று தோற்றமளிக்கின்றன. அவற்றை நாம் ஒழுங்கான வினைச் சொற்கள் (Regular Verbs) என்போம்.
இவைகள் இவ்வாறு தோற்றமளிக்கின்றனவே தவிர, உண்மையில் இவை Past Participle களே ஆகும்.
இவ்வாறான "ed" சேர்ந்த வினைச் சொற்களை நாம் காணும்போது, இவை Past Tense களா அல்லது Past Participle களா என்பதை அறிந்து கொள்ள இலகுவான வழி, இவை தனியே வருமாயின் Past Tense எனவும், "have, has, had" என்பற்றுடன் சேர்ந்து வருமாயின் Past Participle எனவும் கண்டுகொள்வதேயாகும்.
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
For Free Lessons: Email: For Comments:
www.speakinenglishtoday.tk speakinenglishtoday@gmail.com www.speakinenglishtoday.blogspot.com