Research Centre for Efficient Teaching Methods
Your right centre for learning and speaking English easily and effectively!
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
மாதிரி பாடம் - 1
Auxiliary Verbs (துணை வினைச் சொற்கள்): am, is, are
ஆங்கிலம் கற்கவென பல "ஆங்கில பேச்சுப் பயிற்சி" புத்தகங்கள் நிறையவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆயினும், அவற்றை ஆசையுடனும் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் வாங்கிப் படிக்கும் பலராலும் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தையேனும் சுயமாக அமைத்துப் பேச முடியாமல் திண்டாடுகின்றனர். அதில் ஒருவராக நீங்களும் ஒருவேளை இருக்கக் கூடும். இதற்கான காரணம், அவற்றில் மாணவர்கள் எதிர்பார்க்கும் விளக்கங்கள் போதுமானளவு கிடைப்பதில்லை என்பது மட்டுமல்ல பெரும்பாலும் பொருத்தமில்லாத பிழையான விளக்கங்கள் கொடுக்கப்படுவதுமாகும்.
எனவே, இங்கு நாம் அடிப்படையான சில விளக்கங்களை இப் பாடத்தில் கொடுத்திருக்கின்றோம். சற்று கவனமெடுத்து படித்து விளங்கிக் கொள்ளுங்கள்.
1. I am a student
2. He is a teacher
3. You are our friends
என சில வாக்கியங்கள் இருக்கின்றன. இவற்றிற்கான தமிழ் கருத்துக்களாக முறையே,
1. நான் ஒரு மாணவன்
2. அவர் ஓர் ஆசிரியர்
3. நீங்கள் எமது நண்பர்கள்
எனக் கொடுக்கப்படுகின்றன.
"I am a student" எனும் வாக்கியத்தை எடுத்துக் கொண்டால், "a" என்பது "ஒரு" என்பதையும், "student" என்பது "மாணவன்" என்பதையும் பொருளாகக் கொடுக்குமானால், "I am" என்பது "நான்" என பல மாணவர்கள் பிழையாக எண்ணிக் கொள்கின்றனர்.
அதேபோன்று, "He is a teacher" எனும் வாக்கியத்தில், "a" என்பது, "ஓர்" எனவும், "teacher" என்பது "ஆசிரியர்" எனவும் பொருள் கொடுக்குமானால், "He is" என்பது, "அவர்" என்பதாகும் என அவர்கள் பிழையாக எண்ணிக் கொள்கின்றனர்.
"You are our friends" எனும் வாக்கியத்திலும் இதேபோன்றே, "You are" என்பது, "நீங்கள்" என்பதாகும் என அவர்கள் பிழையாகவே எண்ணிக் கொள்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் விளங்கிக் கொள்வதனால் எப்போதுமே "நான்" என்பதற்கு "I am" எனவும், "அவர்" என்பதற்கு "He is" எனவும், "நீங்கள்" என்பதற்கு "You are" எனவும் ஆங்கிலத்தில் பேச முற்படுகின்றனர். எனவே, "நான் காலையில் சந்தைக்குப் போனேன்" என சொல்ல வரும்போது, "I am went to market in the morning" என பிழையாக பேச முற்படுகின்றனர். சிலர் அவ்வாறே பிழையாகவே பேசுவதை பல இடங்களில் நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இது மிகவும் பிழையாகும். உண்மையிலேயே, அது ஆங்கிலத்தில் "I went to market in the morning" என வரவேண்டும். இவர்கள் இவ்வாறு பிழையாக விளங்கிக் கொள்வதற்கான காரணம் ஆரம்பத்தில் கற்கும்போதே "நான்" என்பதற்கு இவ்வாறு பிழையான முறைகளால் "I am" என தாமாக கற்பிதம் செய்து கொள்வதனாலாகும். எனவே, இதன் உண்மையான விளக்கத்தை இங்கு அறிந்து கொள்வோம்.
"am, is, are" என்பன "be" எனும் ஆங்கில வினைச் சொல்லின் நிகழ்கால (Present Tense) வடிவங்களாகும். "be" என்பதன் பொருள் தமிழில் "இரு, ஆகு" என்பதாகும். ஆனால் இவை, தாம் சேர்ந்து வரும் எழுவாய்களைப் பொறுத்து தமிழில் வெவ்வேறு பொருள்களைக் கொடுக்கக் கூடியன.
உதாரணமாக, "am" என்பது "இருக்கிறேன், ஆவேன்" எனவும், "is" என்பது "இருக்கிறான், ஆவான்; இருக்கிறாள், ஆவாள்; இருக்கிறார், ஆவார்; இருக்கிறது, ஆகும்" எனவும், "are" என்பது "இருக்கின்றாய், ஆவாய்; இருக்கின்றீர்கள், ஆவீர்கள்; இருக்கின்றோம், ஆவோம்; இருக்கின்றார்கள், ஆவார்கள்; இருக்கின்றன, ஆகும்" என எழுவாய்களைப் பொறுத்து பொருள் கொடுக்கின்றன.
எனவே, "I am a student" என்பதன் உண்மையான பொருள், "நான் ஒரு மாணவன் ஆகும்" என்பதாகும். "He is a teacher" என்பதன் பொருள், "அவர் ஓர் ஆசிரியர் ஆவார்" என்பதாகும். இதேபோன்றே, "You are our friends" என்பதன் பொருள், "நீங்கள் எமது நண்பர்கள் ஆவீர்கள்" என்பதாகும்.
இவ்வாறு ஆரம்ப முதலே சரியான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்குமானால் பல மாணவர்கள் பிழையான முறையில் பொருள் கொள்ளாது, "நான்" என்பதற்கு "I" எனவும், "அவர்" என்பதற்கு "He" எனவும், "நீங்கள்" என்பதற்கு "You" எனவும் சரியான விளக்கத்தைக் கொண்டிருப்பர்.
இங்கு நாம் "be" என்பதற்கு "ஆகு" என பொருள் கொள்வதற்கான காரணம், "am, is, are" என்பவற்றின் பின்னால் ஒரு பெயர்ச் சொல் (Noun) வரும்போது இவற்றிற்கான பொருளாக "ஆகு" என்பதைக் கொள்ளல் வேண்டும் என்பதனாலாகும்.
இனி நாம், "இரு" எனும் பொருள் எப்போது கொள்ளப்படுகின்றது என்பதைப் பார்ப்போம். "am, is, are" என்பவற்றினைத் தொடர்ந்து "going, coming, speaking" போன்ற ஆங்கில வினைச் சொல் ஒன்றின் நிகழ்கால எச்சங்கள் (Present Participles) வரும்போது நாம் இவ்வாறு "இரு" என பொருள் கொள்கின்றோம்.
உதாரணமாக, "I am going to market" எனும் வாக்கியத்தில் "am" ஐத் தொடர்ந்து "going" எனும் நிகழ்கால எச்சம் (Present Participle) வருவதால் அதன் பொருளாக "நான் சந்தைக்குப் போய்க்கொண்டு இருக்கின்றேன்" என்பதைக் கொள்கின்றோம்.
"He is going to market" எனும் வாக்கியத்தை, "அவர் சந்தைக்குப் போய்க்கொண்டு இருக்கின்றார்" எனவும், "They are going to market" எனும் வாக்கியத்தை, "அவர்கள் சந்தைக்குப் போய்க்கொண்டு இருக்கின்றார்கள்" எனவும் பொருள் கொள்கின்றோம்.
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |